செய்திகள்
தமிழக அரசு

வருகிற சட்டசபை கூட்டத் தொடரில் எம்எல்ஏக்களுக்கு லேப்-டாப்

Published On 2021-07-04 13:12 GMT   |   Update On 2021-07-04 13:12 GMT
சட்டசபை நிகழ்ச்சிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

சென்னை:

தமிழக சட்டசபை  கூட்டத் தொடர் இந்த மாதம் 3-வது வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்தபிறகு அதன் மீது விவாதம் நடைபெறும் பின்னர் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்.

முக ஸ்டாலின் முதல்-அமைச்சரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்னென்ன அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டசபை நிகழ்ச்சிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த  மத்திய அரசு  ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி தமிழக சட்டசபையில் காகிதமில்லா நடவடிக்கைகளை செயல்படுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்களுக்கு அவை சம்பந்தப்பட்ட அறிவுப்புகள் தகவல்கள் கடந்த 3 வருடங்களாக இ.மெயில் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்-டாப் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


இதற்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு சட்ட சபை தொடரில் அறிவிப்பார் என தெரிகிறது.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் ‘நேவா’ என்ற திட்டத்தின் கீழ் பேரவை நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என கூறி உள்ளதால் தமிழகத்திலும் அதை செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கான பயிற்சி வகுப்புகள், திட்டங்கள் ஆகியவை தமிழக சட்ட பேரவை செயலகத்தின் மூலமாக செயல்படுத்தப்படும்.

எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்-டாப் வழங்கும் பட்சத்தில் நிதிநிலை அறிக்கை உள்பட அவையில் தாக்கலாகும் அனைத்து அறிவிப்புகளையும் லேப்-டாப் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இதனால் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்குவது குறைந்துவிடும். இதனால் காகிதங்கள் பயன்பாடு குறைந்து செலவு மிச்சமாகும்.

சட்டசபையில் செல்போன் எடுத்துவர தடை உள்ளதால் லேப்-டாப் போன்ற மின்னணு சாதனங்களை சபையில் பயன்படுத்தும் வகையில் அவை விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News