செய்திகள்
கைது

திருச்சியில் 30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்- அரிசி ஆலையில் குருணையாக்கிய 3 பேர் கைது

Published On 2021-06-26 11:59 GMT   |   Update On 2021-06-26 11:59 GMT
ரேஷன் அரிசியை கடத்தி கொண்டு வந்து அரிசி ஆலையில் குருணையாக அரைத்து கொண்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி காந்தி மார்க்கெட்-தஞ்சாவூர் சாலையில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து அவற்றை குருணையாகவும், மாவாகவும் அரைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக திருச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அலாவுதீன், செல்வராசு மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட அரிசி ஆலைக்கு சென்றனர்.

அப்போது அங்கு ரேஷன் அரிசியை கொண்டு வந்த 3 பேர், அவற்றை குருணை அரிசியாக அரைத்து மாற்றம் செய்து கொண்டிருந்தனர். 30 மூட்டைகளில், மூட்டைக்கு 40 கிலோ வீதம் மொத்தம் 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ரேஷன் அரிசியை கடத்தி கொண்டு வந்து அரிசி ஆலையில் குருணையாக அரைத்து கொண்டிருந்த திருச்சி வரகனேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 28), அரியமங்கலம் உக்கடையை சேர்ந்த ஹக்கீம் (27) மற்றும் அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த பிலவேந்திரன் (49) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், குறைந்த விலைக்கு பல இடங்களில் சிறுக சிறுக ரேஷன் அரிசியை வாங்கி சேமித்து வைத்து மொத்தமாக அரைத்து கோழி தீவனத்திற்கும், மாவாக அரைத்து முறுக்கு போட்டு விற்பனை செய்பவர்களுக்கும் விற்பனை செய்வோம் என கைதான மூவரும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News