செய்திகள்
கோப்புப்படம்

ஊரடங்கில் தொழிலாளர்களுக்கு கை கொடுக்கும் விவசாயப்பணி

Published On 2021-06-21 09:32 GMT   |   Update On 2021-06-21 09:32 GMT
போதுமான தொழிலாளர்கள் கிடைத்து குறித்த நேரத்தில் சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
குடிமங்கலம்:

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர்.திட்ட பணியாளர்கள் விவசாய மற்றும் நீர்நிலை மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இத்திட்டம் இருந்து வந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி முடங்கும் நிலை உருவானது.ஆனால் உடுமலை, குடிமங்கலம் பகுதியில் பருவமழைக்கு முன்னதாக பல்வேறு சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

தக்காளி, கத்தரி, சின்னவெங்காயம் உட்பட சாகுபடிக்கு நடவு பணிகள், களையெடுத்தல், தென்னை மரங்களுக்கு உரமிடுதல் உட்பட பணிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிரமடைந்துள்ளது.இப்பணிகளில் கிராமப்புற பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் வருவாய் இழப்பு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக வேலைவாய்ப்பு இல்லாத நூற்பாலை, பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் விவசாய சாகுபடி பணிகளால் வேலை கிடைத்து வருகிறது.தற்போது போதுமான தொழிலாளர்கள் கிடைத்து குறித்த நேரத்தில் சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதும் தொழிலாளர் தட்டுப்பாடு அதிகரித்து எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News