செய்திகள்
கோப்புபடம்

உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்க அனுமதி-உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

Published On 2021-06-20 08:28 GMT   |   Update On 2021-06-20 08:28 GMT
உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்காததால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
திருப்பூர்:

உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்க அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ‘சைமா’ தலைவர் ஈஸ்வரன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில்,

திருப்பூர் பின்னலாடை துறையை உள்நாட்டுக்கான உற்பத்தி, ஏற்றுமதி ஆடை உற்பத்தி என தனித்தனியே பிரித்துப்பார்க்க இயலாது. இருவகை உற்பத்தி துறைகளுக்கும் நிட்டிங், டையிங், பிளீச்சிங், காம்பாக்டிங், கட்டிங், தையல், செக்கிங், அயர்னிங், பேக்கிங் என அனைத்து பிரிவுகளும் பொதுவானதாக உள்ளன.

ஆனால் அரசு ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் இயங்க அனுமதி அளித்துள்ளது.ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது; உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கான பொருளாதாரம் மேம்படுகிறது. 

அரசு அறிவித்துள்ள தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தொழிலாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் அனைவருமே அக்கறை கொண்டுள்ளனர்.

உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்காததால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். நிறுவனங்களுக்கும் வர்த்தக இழப்பு, நிதிச்சுமை அதிகரித்து வருகிறது.

உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயக்கத்தை துவக்கும் வகையிலான தளர்வுகளை முதல்வர் விரைந்து அறிவிக்கவேண்டும். அனைத்து நிறுவனங்களும் 50 சதவீத தொழிலாளருடன் இயங்க அனுமதிக்கவேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News