செய்திகள்
கோப்புபடம்

ஊரடங்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 400பேர் மீது வழக்கு

Published On 2021-06-20 07:51 GMT   |   Update On 2021-06-20 07:51 GMT
ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக எஸ்.பி., சஷாங் சாய் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற சஷாங் சாய் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட தங்கள் பகுதிகளில் மது, லாட்டரி உட்பட எவ்வித சட்டவிரோத செயல்களும் நடக்கக்கூடாது. மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக சப்-டிவிஷன்களில் உள்ள தனிப்படை போலீசார் தங்கள் பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சூழலில் குற்றப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, மதுவிலக்கு என சப்-இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை என 280 போலீசாரை எஸ்.பி., அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி., சஷாங் சாய் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் 280 பேர் மாவட்டத்துக்குள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இதற்கு முன்பு பணியில் ஒழுங்கினமாக நடந்து கொண்டு இடமாற்றத்தில் சென்ற சிலருக்கு அவர்கள் கேட்ட ஸ்டேஷன் ஒதுக்கப்பட்டது. அவர்கள் திருந்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பு இது. மீண்டும் ஏதாவது தவறு செய்தால் கடும் நடவடிக்கை இருக்கும் என்றார்.

இதனிடையே  ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக எஸ்.பி., சஷாங் சாய் மேற்பார்வையில் கடந்த 7-ந்தேதி முதல் 16ந் தேதி வரை போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். இதில் சட்டவிரோத லாட்டரி விற்பனை, கஞ்சா, சூதாட்டம் என  46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 156 பேர் கைது செய்யப்பட்டனர். 2.5 கிலோ கஞ்சா, புகையிலை பொருள், 11,851 பாக்கெட் புகையிலை பொருட்கள், 14 சேவல், லட்சம் ரூபாய் ரொக்கம், 12 மோட்டார் சைக்கிள், ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மது, கள், சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 250 வழக்குகள்  பதியப்பட்டு 256 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 3,178 மது பாட்டில், 605 கர்நாடக மது பாட்டில், 41.5 லிட்டர் சாராயம், 308 லிட்டர்  ஊறல் மற்றும் ரூ.41ஆயிரம், 73 மோட்டார் சைக்கிள், 33 நான்கு சக்கரம் மற்றும் ஒரு கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News