செய்திகள்
கோப்புப்படம்

ரேசன் கடை இல்லாததால் தவிக்கும் தளிஞ்சி மலைவாழ் மக்கள்

Published On 2021-06-19 07:43 GMT   |   Update On 2021-06-19 07:43 GMT
ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை.மழைக்காலங்களில் ஆற்றை கடக்க முடியாத நிலை காணப்படுகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனசரகத்துக்குட்பட்ட தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பில் 150-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.இரு மலைகளுக்கு இடையிலுள்ள சமவெளியில் வீடுகள் கட்டி விவசாய சாகுபடியிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் ரேஷன் கடை வசதியில்லாததால் சின்னாறு சோதனைசாவடி பகுதிக்கு ரேஷன் பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு நாள் தளிஞ்சி கிராம மக்கள் வர வேண்டியுள்ளது. சின்னாறுக்கு வர கரடு முரடான பாறைகள் நிறைந்த 6 கி.மீ., அடர்ந்த வனப்பகுதியிலுள்ள மண் பாதையில் பயணிக்க வேண்டும்.வழித்தடத்தில் கூட்டாறு  ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை.மழைக்காலங்களில் ஆற்றை கடக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இல்லாவிட்டால் கேரளா வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சம்பக்காடு சென்று அங்கிருந்து பஸ் பிடித்து சின்னாறு ரேஷன் கடைக்கு வர வேண்டியுள்ளது.பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருப்பதால் ரேஷன் பொருட்களை பெற முடியாமல் தளிஞ்சி கிராமமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசிக்கும், சோலார் பேனல்கள் பழுது காரணமாக இரவு நேரங்களில் விளக்கு எரிக்க மண்எண்ணையும் அக்கிராம மக்களுக்கு அவசிய தேவையாக உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 

எங்கள் குடியிருப்பில் நிரந்தர ரேஷன் கடை இல்லாததால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். உணவு மற்றும் இதர தேவைகளுக்காக சமவெளிப்பகுதிக்கு வரும் போது வனவிலங்குகள், கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு உட்பட பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம். எனவே ஆற்றின் குறுக்கே பாலம் மற்றும் ரேஷன் கடை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
Tags:    

Similar News