செய்திகள்
கோப்புப்படம்

அமராவதி ஆற்றில் புதர்களால் நீரோட்டம் தடை

Published On 2021-06-16 07:03 GMT   |   Update On 2021-06-16 07:03 GMT
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் அருகிலுள்ள விளைநிலங்களில் ஆற்று நீர் புகுந்து சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மடத்துக்குளம்:

உடுமலையை அடுத்த அமராவதி அணையை நீராதாரமாகக்கொண்டு அமராவதி ஆறு மூலம் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.மேலும் அமராவதி ஆற்றங்கரையோர கிராமங்கள் பயன்பெறும் வகையில் நூற்றுக்கணக்கான குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்க,கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய என்று பலவகைகளில் மக்களுடன் இரண்டற கலந்துள்ளது அமராவதி ஆறு.  

இந்த நிலையில் மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றினுள் பல இடங்களில் புதர் மண்டி கிடப்பதால் சீரான நீரோட்டத்துக்கு தடை ஏற்படுகிறது.இதனால் பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் அருகிலுள்ள விளைநிலங்களில் ஆற்று நீர் புகுந்து சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப்பாலம் மற்றும் ரெயில்வே பாலத்துக்கு அருகில் பொதுமக்கள் அதிக அளவில் குளிக்கவும் துணி துவைக்கவும் அமராவதி ஆற்றைப்பயன்படுத்துகின்றனர். இங்கு அதிக அளவில் புதர் மண்டியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே குளிக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அமராவதி ஆற்றில் புதர்கள் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் புதர் மறைவை சாதகமாகப்பயன்படுத்தி மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஒருசிலர் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழித்தடமும் புதர்மண்டியும் துர்நாற்றம் வீசும் நிலையிலும் உள்ளது. 

எனவே அமராவதி ஆற்றிலுள்ள புதர்களை அகற்றவும், வழித்தடத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென இந்த பகுதிகளில் படித்துறை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News