செய்திகள்
ரேசன் கடை

ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள 14 வகை மளிகை பொருட்களுக்கு நாளை முதல் டோக்கன்

Published On 2021-06-10 05:18 GMT   |   Update On 2021-06-10 05:18 GMT
ரே‌ஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. அரிசி கார்டு வைத்துள்ள 2.11 கோடி குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைய உள்ளனர்.
சென்னை:

சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இதன்படி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் கடந்த மாதம் 7-ந் தேதி கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதன்படி கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் 2-வது முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரே‌ஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக நாளை (11-ந் தேதி) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்று ரே‌ஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.



15-ந் தேதி முதல் ரே‌ஷன் கடைகளில் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. அரிசி கார்டு வைத்துள்ள 2.11 கோடி குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைய உள்ளனர்.

14 வகை மளிகைப்பொருட்களை ஒரு பையில் போட்டு கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் பையும் தயாராக உள்ளது.

கோதுமை மாவு-1 கிலோ, உப்பு -1 கிலோ, சர்க்கரை-500 கிராம், உளுத்தம்பருப்பு- 500 கிராம், புளி-250 கிராம், கடலை பருப்பு-250 கிராம், கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மஞ்சள் தூள்-100 கிராம், மிளகாய் தூள்-100 கிராம், டீத்தூள் -100 (2 பாக்கெட்டுகள்), குளியல் சோப்-1 (125 கிராம்), சலவை சோப்-1 (250 கிராம்) ஆகிய 14 பொருட்கள் சிறப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்த பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனைத்து ரே‌ஷன் கடை களுக்கும் இன்னும் சில தினங்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. ரே‌ஷன் கடை ஊழியர்களே அவைகளை பார்சல்களாக போட்டு தயார் செய்ய உள்ளனர்.

பின்னர் பொதுமக்களிடம் டோக்கன்களை பெற்றுக்கொண்டு மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பையும், ரூ.2 ஆயிரம் நிவாரண உதவியையும் வழங்க உள்ளனர்.

இதற்கிடையே பல்வேறு ரே‌ஷன் கடைகளில் கடந்த வாரமே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த டோக்கன்களில் 11-ந் தேதிக்கு முந்தைய தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோன்று வினியோகம் செய்யப்பட்ட டோக்கன்களில் தேதியை மாற்றி கொடுக்க ரே‌ஷன் கடை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News