செய்திகள்
பிச்சைக்காரரிடம் இருந்த பணத்தையும், பறிமுதல் செய்யப்பட்ட கத்தியையும் காணலாம்

காப்பகத்தில் சேர்ப்பதற்காக மீட்கப்பட்ட பிச்சைக்காரரிடம் கத்தி இருந்ததால் போலீசார் அதிர்ச்சி

Published On 2021-06-08 04:03 GMT   |   Update On 2021-06-08 04:03 GMT
போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து மொத்தம் 42 பிச்சைக்காரர்களை மீட்டு அபய கேந்திராவில் சேர்த்துள்ளனர்.
நாகர்கோவில்:

கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், உணவு சரியாக கிடைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து அவர்களை மீட்டு அபய கேந்திராவில் சேர்த்து வருகிறார்கள். நேற்று மாலை நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் தங்கியிருந்த 3 பிச்சைக்காரர்களை நாகர்கோவில் கட்டுப்பாட்டு அறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் போலீசார் மீட்டனர்.

அவர்களை பரிசோதனை செய்தபோது மூன்று பேரில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (வயது 50) என்பது தெரியவந்தது. அவரிடம் பிச்சையெடுத்து சேமித்த பணம் ரூ.3,500-ம் சுமார் ஒரு அடி நீளமுள்ள கத்தி ஒன்றும் இருந்தது. பிச்சைக்காரரிடம் கத்தி இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரிடம், ‘கத்தி எதற்காக வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு, பிச்சை எடுத்த பணத்தை கஞ்சா போதை ஆசாமிகள் பறித்துச் செல்வதாகவும் அவர்களை எச்சரிக்கை செய்ய கத்தி வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது குற்ற வழக்குகள் எதாவது உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் மீது வழக்கு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

மற்றொருவர் கருங்கலில் இருந்து தினமும் ஆட்டோவில் நாகர்கோவிலுக்கு வந்து பிச்சை எடுத்து செல்வதாகவும், கருங்கலில் அவர் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, நாகர்கோவிலில் உள்ள அபய கேந்திராவில் கொண்டு போய் சேர்த்தனர்.

இதுவரை போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து மொத்தம் 42 பிச்சைக்காரர்களை மீட்டு அபய கேந்திராவில் சேர்த்துள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கேந்திராவில் தங்க வைக்கப்பட்டுள்ள பிச்சைக்காரர்களின் பலருக்கு பல்வேறு வேலைகள் தெரிந்திருப்பதால் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு வேலை பெற்று தரவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் நாகர்கோவில் நகர பகுதியில் பிச்சைக்காரர்களுக்கு காசு, பணம் கொடுத்து மக்கள் ஊக்குவிக்க வேண்டாம் எனவும் அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து சமூகத்தில் அவர்களும் நல்ல வாழ்க்கையை வாழ வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள் என பொதுமக்களுக்கு போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News