செய்திகள்
சென்னை ஐகோர்ட்

புராதன கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-06-07 08:39 GMT   |   Update On 2021-06-07 08:39 GMT
தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில்களின் பட்டியலை தயாரித்து, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது தொடர்பாக 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கில் இந்து சமய அறநியைத்துறை சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். குறிப்பாக, வரலாற்று சிறப்புமிக்க புராதன கோயில்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டது. 



தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில்களின் பட்டியலை தயாரித்து, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவேண்டும், கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்த வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும், நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும், கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும், சிலைகள் மற்றும் நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களில் வெளியிட வேண்டும், 

அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும், மத்திய சிலைகள் பாதுகாப்பு பிரிவை அமைக்க வேண்டும்,  கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும், கோயில் நிலங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், அதுகுறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 12 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News