செய்திகள்
கே.பி. முனுசாமி

தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி - கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

Published On 2021-05-31 20:51 GMT   |   Update On 2021-05-31 20:51 GMT
கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன் கவலைப்படாதீங்க என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை:

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் அவரின் அரசியல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி கண்டு ஆட்சியை இழந்தது.

இதற்கிடையே, சசிகலா தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன். கவலைப்படாதீங்க என பேசியுள்ளார்.

மேலும் சில தொண்டர்களுடன் சசிகலா செல்போனில் பேசும் ஆடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.



இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, “சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அ.தி.மு.க தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார். அ.தி.மு.க.வை திசைதிருப்பி தொண்டர்களைக் குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது, ஒரு தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக, சசிகலா தான் அவர்களிடம் பேசி வருகிறார்” என குற்றம்சாட்டினார்.

மேலும், சசிகலா பேசும் நபர்கள் அ.ம.மு.கவைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையவாவது சசிகலா குடும்பம் அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Tags:    

Similar News