செய்திகள்
கோப்புபடம்

தண்டவாளத்தில் சிக்னல் சரி செய்தபோது சரக்கு ரெயில் மோதி ஊழியர்கள் 2 பேர் பலி

Published On 2021-05-31 08:54 GMT   |   Update On 2021-05-31 08:54 GMT
ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் சிக்னல் சரி செய்த போது சரக்கு ரெயில் மோதிய விபத்து 2 ஊழியர்கள் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் நேற்று பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இரவு 10 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் ரெயில் பாதையில் உள்ள சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

அதனை சரிசெய்ய ஆம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொழில்நுட்ப பணியாளர்கள் திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு பகுதியை சேர்ந்த முருகேசன், பீகாரை சேர்ந்த பிரவேஷ் குமார் ஆகிய 2 பேர் கன்னிகாபுரம் பகுதிக்கு சென்றனர். அங்கு சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்ற சரக்கு ரெயில் சிக்னல் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முருகேசன், பிரவேஷ்குமார் ஆகிய 2 பேர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் வரும்போது பலத்த மழை பெய்ததால் ஊழியர்களுக்கு ரெயில் வருவது தெரியாமல் ரெயிலில் சிக்கி பலியானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News