செய்திகள்
கோப்புபடம்

பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உருக்கமான வேண்டுகோள்

Published On 2021-05-31 06:55 GMT   |   Update On 2021-05-31 13:24 GMT
அசாத்தியமான இந்த சூழலில் வெளிநாட்டு வர்த்தகர்களும், பிராண்டட் நிறுவனங்களும் திருப்பூர் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுடன் தொடர்ந்து கரம்கோர்த்திருக்கவேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருப்பூர்:

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்து தமிழக அரசு  முழு ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது.  அத்தியாவசிய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்தியுள்ளன.இதனால் குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்து வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு அனுப்பமுடியாத நிலை உருவாகியுள்ளது.இதனால் ஆர்டர்கள் கைநழுவி போட்டி நாடுகளுக்கு சென்று விடுமோ ? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் வெளிநாட்டு வர்த்தகர்களுக்காக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கி கைகொடுத்துவரும் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் பிராண்டட் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். வர்த்தகர்களின் தொடர் ஆதரவாலேயே பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நகராக திருப்பூர் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக கிராமப்புற ஏழைகள், பெண்களின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காலத்திலும் திருப்பூர் நிறுவனங்கள் ஏற்றுமதி ஆடைகளை தயாரித்து வர்த்தகர்கள் மற்றும் பிராண்டட் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தன.தற்போது  கொரோனா இரண்டாவது அலை வீசிவருகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் ஜூன் 7-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டு திருப்பூர் நிறுவனங்கள் ஆடை உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளன.

அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடும் முயற்சிகள் நடந்து வருகின்றன.வெகு விரைவிலேயே, இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துவிடும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.அசாத்தியமான இந்த சூழலில் வெளிநாட்டு வர்த்தகர்களும், பிராண்டட் நிறுவனங்களும், திருப்பூர் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுடன் தொடர்ந்து கரம் கோர்த்திருக்கவேண்டும். உற்பத்தியில் ஏற்படும் காலதாமதங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்களை தொடர்ந்து வழங்கவேண்டும்.இது, எதிர்காலத்தில், உற்பத்தியாளர்-வர்த்தகர் இடையிலான வர்த்தக நல்லுறவை மேலும் பலப்படுத்தும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஏற்றுமதியாளர் சங்க தலைவரின் இந்த கடிதம் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மூலம்  அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்வேறு நாட்டு வர்த்தகர்கள் மற்றும் பிராண்டட் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News