செய்திகள்
கோப்புபடம்

குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்

Published On 2021-05-30 11:29 GMT   |   Update On 2021-05-30 11:29 GMT
மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.

குளச்சல்:

குமரி மாவட்டத்தின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த தடைக்காலம் 2 பகுதிகளாக கடைபிடிக்கப்படுகிறது.

குமரி கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை பகுதியில் மே 31-ந்தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந்தேதிவரை விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளது.இந்த தடை வருகிற ஜூன் 15-ந்தேதி வரை அமலில் இருக்கும். மேற்கு கடற்கரை பகுதியில் நாளை நள்ளிரவு முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை அமலுக்கு வருகிறது. மேற்கூறிய மேற்கு கடலோர கிராமத்தில் ஏற்கனவே கடந்த 5 நாட்களுக்கு முன்பு விடுக்கப்பட்ட யாஸ் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு மேற்கு கடலோர கிராமங்களிலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பியது.

கரை திரும்பிய குளச்சல் பகுதி விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.இதற்கிடையே கடந்த 10-ந்தேதி முதல் கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் மீன் பிடிப்பதற்கும், வியாபாரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் கடந்த 2 வாரமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்ப்பது, பெயிண்டு அடிப்பது,பேட்டரி மற்றும் ஓயரிங், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

Tags:    

Similar News