செய்திகள்
சிறுமி திருமணம் நிறுத்தம்

திண்டுக்கல் அருகே இன்று சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2021-05-23 09:06 GMT   |   Update On 2021-05-23 09:06 GMT
திண்டுக்கல் அருகே இன்று சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை யூனியனுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் தங்கள் பெண் குழந்தைகளை நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் தகவல் தெரிவித்து திருமணம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் கொல்லப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 28) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் விசாரணையில் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்தது உறுதி என தெரிய வந்தது.

இதனையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து எச்சரிக்கை செய்ததுடன் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கை குறித்து எடுத்து கூறினர். திருமணத்தை தடுத்து நிறுத்தியதோடு இரு வீட்டார் குடும்பத்தினரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.

ஊரடங்கு காலத்தில் இது போல கிராமங்களில் நடக்கும் குழந்தை திருமணங்கள் குறித்து பொதுமக்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கோ அல்லது சைல்டு லைன் அமைப்புக்கோ புகார் தெரிவிக்கலாம் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News