செய்திகள்
புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

தமிழ்நாட்டில் கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published On 2021-05-21 13:09 GMT   |   Update On 2021-05-21 13:09 GMT
தமிழ்நாட்டில் கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, அரியமங்கலம் குப்பைக் கிடங்கு, சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.18 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் பணிகள் உள்ளிட்டவைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு என்னென்ன உபகரணங்கள் தேவை?, என்ன குறைபாடுகள் உள்ளன? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 75 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் குறித்தும் கேட்டறியப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-ம் அலையை எதிர் கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.

அரியமங்கலத்தில் 47.7 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு பல லட்சம் டன் குப்பைகள் குவிந்துள்ளன. தினமும் 1,500 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் முழுவதுமாக அங்கிருந்து குப்பைகள் அகற்றப்பட்டு விடும்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் 53 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குள் முதல் பகுதி நிறைவடையும். 2-வது பகுதி இன்னும 3 மாத காலத்திற்குள் நிறைவடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆய்வின்போது ஜோதிமணி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), அப்துல்சமது (மணப்பாறை), கலெக்டர் சிவராசு, இணை இயக்குனர்(குடும்பநலம்) டாக்டர் லெட்சுமி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாநகராட்சி முதன்மை பொறியாளர் அமுதவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News