செய்திகள்
வலங்கைமான் குடமுருட்டி ஆற்றுப்பாலம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

வலங்கைமான் அருகே திருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Published On 2021-05-20 14:49 GMT   |   Update On 2021-05-20 14:49 GMT
வலங்கைமான் அருகே திருவாரூர் மாவட்ட எல்லையில் ேபாலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசின் உத்தரவின்படி வலங்கைமான் பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறந்திருக்கின்றன. காலை 10 மணிக்கு மேல் போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கி விடுகின்றனர். ஆனாலும் பலர் ஊரடங்கை மீறி சாலையில் வலம் வந்த வண்ணம் உள்ளனர்.

ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதால், வலங்கைமான் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியை கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தி உள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

இ-பதிவு இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர்-தஞ்சை மாவட்ட எல்லையான வலங்கைமான் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றுப்பாலம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இ-பதிவு உள்ளதா? என வாகன ஓட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் கண்காணிப்பு பணிகளை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆய்வு செய்தார். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இதனிடையே வலங்கைமான் பகுதியில் காரணமில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News