செய்திகள்
குப்பை கிடங்கில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

கூத்தாநல்லூரில் குப்பை கிடங்கில் தீ- புகைமூட்டம் பரவியதால் பொதுமக்கள் அவதி

Published On 2021-05-18 10:25 GMT   |   Update On 2021-05-18 10:25 GMT
கூத்தாநல்லூரில் உள்ள குப்பை கிடங்கில் தீப்பிடித்தது. இதனால் புகை மூட்டம் பரவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கூத்தாநல்லூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியின் குப்பை கிடங்கு, குனுக்கடி கிராமத்தையொட்டி உள்ள ஒரு வயலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த குப்பை கிடங்கில் கூத்தாநல்லூர் நகராட்சியின் 24 வார்டுகளில் உள்ள தெருக்களில் இருந்து சேகரமாகும் குப்பைகள் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் புகை மூட்டம் பரவியது. வெயில் கடுமையாக இருந்த நேரத்தில் புகை மூட்டமும் பரவியதால் பொாதுமக்கள் அவதிப்பட்டனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா, என்ஜினீயர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பிடித்து புகை மூட்டம் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News