செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் இதுவரை கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்ற 24 பேர் கைது

Published On 2021-05-15 20:31 GMT   |   Update On 2021-05-15 20:31 GMT
சென்னையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

சென்னையில் இதுவரை ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்றதாக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றால் உடல்நலம் மோசம் அடைந்த நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை பதுக்கி, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் டாக்டர் என்.கண்ணன், டி.செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களின் நேரடி கண்காணிப்பில் உதவி கமிஷனர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசாரின் கண்காணிப்பு நடவடிக்கை மூலம் சென்னையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 243 ‘ரெம்டெசிவிர்’ மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில் 78 மருந்துகள் கொரோனா அவசர சிகிச்சை நோயாளிகள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், மீதம் உள்ள 165 மருந்து பாட்டில்கள் நோயாளிகள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News