செய்திகள்
அறுவடை செய்த வெள்ளரிப்பழங்களை விற்பனைக்கு அனுப்பும் பணி நடந்தபோது எடுத்தபடம்.

நன்னிலம் அருகே வெள்ளரிப்பழம் அறுவடை மும்முரம்

Published On 2021-05-06 15:42 GMT   |   Update On 2021-05-06 15:42 GMT
நன்னிலம் அருகே பூந்தோட்டம் பகுதியில் அறுவடையாகும் வெள்ளரிப்பழங்கள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் பகுதியில் வெள்ளரிப்பழம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த பகுதியில் வெள்ளரிப்பழங்களை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடையாகும் வெள்ளரிப்பழங்கள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வெள்ளரிப்பழம் சாகுபடி செய்து வரும் விவசாயி ஜெயபால் கூறியதாவது:-

வெள்ளரிப்பிஞ்சு என்பது தனிரகம். வெள்ளரிப்பழம் என்பது தனிரகம். நான் வெள்ளரிப்பழத்தை சாகுபடி செய்து வருகிறேன். இதனை சாகுபடி செய்வதற்கு நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். அதன் பின்பு 10 அடிக்கு ஒரு குழி போட்டு அதில் விதைகளை போட வேண்டும்.

நான் இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்து வருகிறேன். செயற்கை உரத்தை பயன்படுத்துவதில்லை. மாட்டுச்சாணம், ஆட்டு சாணம் மட்டுமே போட்டு சாகுபடி செய்துவருகிறேன்.

65 நாட்களில் வெள்ளரிப்பழங்களை அறுவடை செய்ய தொடங்கலாம். ஒரு பழத்தை ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்து வருகிறோம். கோடை காலத்தில் வெள்ளரிப்பழம் உடலுக்கு நல்லது. வெள்ளரி சாகுபடியை ஊக்குவிக்க அரசு நிதி உதவி வழங்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News