செய்திகள்
கைது

கொரோனா பரிசோதனைக்கு சென்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய பெண்கள் விடுதி உரிமையாளர் கைது

Published On 2021-04-21 07:12 GMT   |   Update On 2021-04-21 07:12 GMT
நேற்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

கோவை:

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமின் மூலமாக அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் 52-வது வார்டு காந்திபுரம் 100 அடி ரோடு 3-வது வீதியில் உள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

அப்போது அங்கு செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதிக்கு சென்று மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் என கூறினர். அங்கிருந்த சிலர் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விடுதியின் உரிமையாளர் வாசகன் கொரோனா பரிசோதனை எல்லாம் எடுக்கக்கூடாது என ஆவேசமாக கூறி மாநகராட்சி அதிகாரியின் செல்போனை பிடுங்கி வீசினார்.

இதனை பார்த்த சக ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து விடுதி உரிமையாளர் அங்கிருந்த டைல்ஸ் கற்களையும், பூச்செட்டியையும் எடுத்து ஊழியர்கள் மீது வீசி எறிந்தார். இதில் சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் ஆனந்தன் காயம் அடைந்தார். மேலும் அவர்களுடன் சென்ற பெண் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.

இதையடுத்து விடுதியில் இருந்த பெண்கள் நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம். நீங்கள் வர வேண்டாம். உங்கள் வேலையை நீங்க பாருங்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என ஊழியர்களிடம் தகராறில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் மாநகராட்சி மத்திய மண்டல சுகாதாரதுத்துறை ஆய்வாளர் சந்திரசேகரன் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் மகளிர் விடுதி உரிமையாளர் வாசகன் மீது பொது இடத்தில் தகாத வார்த்தையால் திட்டுதல், அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

Similar News