செய்திகள்
கோப்புபடம்

பிளஸ்-2 வகுப்பு தவிர மற்ற வகுப்பு நடத்த கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

Published On 2021-04-14 10:16 GMT   |   Update On 2021-04-14 10:16 GMT
தனியார் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கோடை காலத்தில் பயிற்சி முகாம்கள் நடத்தவும், போட்டிகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை, கோவை, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பிளஸ்-2 வகுப்புகள் தவிர 9, 10-ம் வகுப்புகளும் நடத்தப்படுவதாக புகார்கள் கூறப்பட்டன. இது குறித்து அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல்கள் வந்தது.

இதையடுத்து தனியார் பள்ளிகளுக்கு பள்ளி, கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது. அதில், “பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பை தவிர பிற மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கும் பள்ளி- கல்வித்துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று பள்ளி- கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


சில தனியார் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கோடை காலத்தில் பயிற்சி முகாம்கள் நடத்தவும், போட்டிகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் நிதி உதவியை பயன்படுத்தி சில போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்வதாக தெரியவந்துள்ளது.

இதற்கும் பள்ளி-கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைக்கும் வகையில் கோடைக்கால பயிற்சிகளை ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News