செய்திகள்
வைகை அணை

கொடைக்கானலில் தொடர் மழை- பெரியாறு, வைகை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து

Published On 2021-04-13 09:20 GMT   |   Update On 2021-04-13 09:20 GMT
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாகவே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது. நேற்று பகல் பொழுதிலும் பலத்த மழை பெய்த நிலையில் மாலையில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வத்தலக்குண்டு சாலையில் டம்டம் பாறை அருகே ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. தொடர்ந்து இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தும் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த வண்ணம் உள்ளனர்.

கடந்த வாரம் வரை சுட்டெரித்து வந்த வெயிலின் தாக்கம் அடியோடு நின்று தற்போது கொடைக்கானலில் ரம்யமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கேரளாவிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது.

நேற்று நீர் வரத்தே இல்லாமல் இருந்த பெரியாறு அணைக்கு இன்று காலை 100 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 126.30 அடியாக உள்ளது. அணையில் இருந்து 100 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3899 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை அணை நீர் மட்டம் 63.50 அடியாக உள்ளது. நேற்று 5 கன அடி மட்டுமே தண்ணீர் வந்த நிலையில் இன்று 40 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4323 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 42.60 அடியாகவும் சோத்துப்பாறை நீர் மட்டம் 104.43 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News