செய்திகள்
கண்மாயில் கிடந்த செம்பு கலசம்

கோவில்பட்டி அருகே கண்மாயில் கிடந்த செம்பு கலசத்தால் பரபரப்பு

Published On 2021-04-12 03:31 GMT   |   Update On 2021-04-12 03:31 GMT
கோவில்பட்டி அருகே கண்மாயில் கிடந்த செம்பு கலசத்தை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் கண்மாய் கரையில் நேற்று காலையில் சுமார் 2 அடி உயர செம்பு கலசம் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, கண்மாயில் கிடந்த செம்பு கலசத்தை கைப்பற்றினர். அந்த செம்பு கலசத்துடன் நீண்ட மரக்கட்டையும், பாறாங்கல்லும் சேர்த்து கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.

எனவே ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள செம்பு கலசத்தை திருடிய மர்மநபர்கள், பின்னர் போலீசாருக்கு பயந்து, அதனை மரக்கட்டை, பாறாங்கல்லுடன் சேர்த்து கட்டி கண்மாயில் வீசி இருக்கலாம். தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் செம்பு கலசம் வெளியில் தெரிந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செம்பு கலசத்தை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News