செய்திகள்
கோப்புபடம்

முக்கூடல் அருகே மகள்-மருமகனை கொலை செய்த தொழிலாளி கைது - பரபரப்பு வாக்குமூலம்

Published On 2021-04-09 14:39 GMT   |   Update On 2021-04-09 14:39 GMT
முக்கூடல் அருகே மகள்-மருமகனைக் கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
முக்கூடல்:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சீதபற்பநல்லூரைச் சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் சிறுத்தை என்ற செல்வம் (வயது 29). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி உச்சிமாகாளி என்ற மஞ்சு (26). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

செல்வம் கடந்த சில ஆண்டுகளாக பக்கத்து ஊரான நந்தன்தட்டை கிராமத்தில் உள்ள தனது மாமனாரான கூலி தொழிலாளி புலேந்திரனின் (60) வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் செல்வம் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததை மாமனார் புலேந்திரன் கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் புலேந்திரன் பேரக்குழந்தைகளை தூக்கி கொஞ்சி விளையாடினார். அப்போது செல்வம் தனது குழந்தைகளை தொடக்கூடாது என்று கூறி மாமனாரிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த புலேந்திரன் அரிவாளால் செல்வத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற மஞ்சுவின் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் செல்வம், மஞ்சு ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக புலேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

கைதான புலேந்திரன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

என்னுடைய மனைவி கிருஷ்ணம்மாள். எங்களுடைய ஒரே மகள் மஞ்சுவை செல்வத்துக்கு திருமணம் செய்து வைத்தோம். செல்வம் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்தார். இதனால் எங்களது மகள் மஞ்சு, 3 குழந்தைகளுடன் வறுமையில் வாடினார். எனவே செல்வத்தை மனைவி, குழந்தைகளுடன் எனது வீட்டில் வந்து வசிக்குமாறு கூறினேன்.

எனது வீட்டுக்கு வந்த பின்னரும் செல்வம் சரியாக வேலைக்கு செல்லாமல், மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்து தாக்கினார். இதனைக் கண்டித்த என்னிடமும் தகராறு செய்தார்.

சம்பவத்தன்று நான் பேரக்குழந்தைகளை தூக்கி கொஞ்சியபோது, செல்வம் என்னை தடுத்து தாக்க முயன்றதால் ஆத்திரத்தில் அவரை அரிவாளால் வெட்டினேன். இதனை தடுக்க முயன்ற மஞ்சுவின் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.

இவ்வாறு புலேந்திரன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பாசமாக வளர்த்த 3 பேரக்குழந்தைகளையும் அனாதையாக்கி விட்டேனே... என்று புலேந்திரன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். குடும்ப தகராறில் தந்தையும், தாயும், தாத்தாவால் படுகொலை செய்யப்பட்டதால், ஆதரவின்றி தவித்த 3 குழந்தைகளையும் பாட்டி கிருஷ்ணம்மாள் வளர்த்து வருகிறார். பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளை உறவினர்கள் தேற்றி வருகின்றனர்.

கைதான புலேந்திரனை போலீசார் நேற்று அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News