செய்திகள்
மீன்பிடி திருவிழா

திண்டுக்கல் அருகே களை கட்டிய மீன்பிடி திருவிழா

Published On 2021-04-09 03:40 GMT   |   Update On 2021-04-09 03:40 GMT
குளத்துக்கரையில் உள்ள கொக்கி அம்மன் ஆலயத்தில் கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். அதன்பிறகு குளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் இறங்கி சிறிய வலைகள் மூலம் மீன்களை பிடித்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியில் வலைஎடுப்பான் குளம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளம் நிரம்பியது. இதனால் அந்த குளத்தில் மீன்குஞ்சுகளை விட்டு கிராம மக்கள் வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் தற்போது குளத்தில் தண்ணீர் வற்றி கொண்டிருக்கிறது. மீன்களும் பெரிதாகி விட்டன. இதனால் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக, புகையிலைப்பட்டி கிராமத்தில் தண்டோரா போடப்பட்டது. இதனையடுத்து புகையிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் குளத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் குளத்துக்கரையில் உள்ள கொக்கி அம்மன் ஆலயத்தில் கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். அதன்பிறகு குளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் இறங்கி சிறிய வலைகள் மூலம் மீன்களை பிடித்தனர். மீன்பிடி திருவிழா களை கட்டியது.

கிராம மக்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு உற்சாகமாக மீன்களை பிடித்தனர். கெண்டை, குறவை, ரோகு, கட்லா உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை வீடுகளுக்கு கொண்டு போய் சமைத்து கிராம மக்கள் சாப்பிட்டனர்.
Tags:    

Similar News