செய்திகள்
விபத்தில் தீப்பிடித்த லாரி முற்றிலும் எரிந்து நாசமானது

உசிலம்பட்டி அருகே வேன் மீது மோதி லாரி தீப்பிடித்தது- ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி

Published On 2021-04-06 07:15 GMT   |   Update On 2021-04-06 07:15 GMT
உசிலம்பட்டி அருகே ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தபோது 3 பேர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உசிலம்பட்டி:

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூரை சேர்ந்த பெண்கள் உள்பட 9 பேர் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதிக்கு வேலைக்கு சென்றனர். இன்று தேர்தல் என்பதால் அவர்கள் ஓட்டுப் போடுவதற்காக ஓரு வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.

இன்று காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அல்லிகுண்டம் பெட்ரோல் பங்க் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே அட்டைகளை ஏற்றி வந்த லாரி, எதிர் பாராதவிதமாக வேன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

மோதிய வேகத்தில் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மாத்தூரை சேர்ந்த முத்துப்பாண்டி, கூமாபட்டியை சேர்ந்த லிங்கம், பாறைப்பட்டியை சேர்ந்த கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் தமிழரசி, முத்து, சுந்தரமூர்த்தி, முத்துமாரி, ஸ்ரீதர், ஹரிராம் மற்றும் லாரி டிரைவர் பீர் முகம்மது உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.


இதுகுறித்து தகவலறிந்த பேரையூர் டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உசிலம்பட்டி, டி. கல்லுப்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தபோது 3 பேர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News