செய்திகள்
கொரோனா வைரஸ்

திருச்சி வாழைக்காய் மண்டி, மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-01 03:45 GMT   |   Update On 2021-04-01 03:45 GMT
திருச்சி மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருச்சி வாழைக்காய் மண்டி, மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
திருச்சி:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுப்பதற்காக திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மாநகராட்சி சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளையும் அதிகப் படுத்தி வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் திருச்சி வாழைக்காய் மண்டி, மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் நேற்று சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுதவிர தனியார் வணிக வளாகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

நேற்று மட்டும் மாநகராட்சி சார்பில் 1085 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று மட்டும் 10 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News