செய்திகள்
கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல அனுமதி

Published On 2021-03-11 20:02 GMT   |   Update On 2021-03-11 20:02 GMT
சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
திருப்பூர்:

சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிவை குறித்து பேசியதாவது:-

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பவன்குமாரிடமும், காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் உதவி ஆணையாளர் (கலால்) ரங்கராஜனிடமும், அவினாசி தொகுதிக்கு அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி வாசுகியிடமும், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு 15வேலம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதனிடமும், திருப்பூர் தெற்கு தொகுதியில் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையாளர் சிவகுமாரிடமும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

பல்லடம் தொகுதிக்கு பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசிடமும், உடுமலை தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. கீதாவிடமும், மடத்துக்குளம் தொகுதிக்கு மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி ஜெயந்தியிடமும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பாளர்கள் படிவம் 2 பி, வேட்பு மனு, படிவம் 26 உறுதிமொழி படிவம் ஆகியவற்றுடன் தாக்கல் செய்ய வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்தவர்கள் தேர்தலில் போட்டியிடலாம். வேட்பாளர்கள் பொதுபிரிவினர் ரூ.10 ஆயிரம், தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் ரூ.5 ஆயிரத்தை டெபாசிட் தொகையாக ரொக்கமாகவோ, செலானாகவோ செலுத்தலாம்.

ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். ஒரு வேட்பாளர் 4 வேட்பு மனுக்களை மட்டும் ஒரு தொகுதியில் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனுவை வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிபவர்களில் யாரேனும் ஒருவரால் தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். முன்மொழிபவர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு ஆஜராகவேண்டியதில்லை. முன்மொழிபவர்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வேட்பு மனு பெறும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லை வரை தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு வேட்பாளருக்கு 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு பெறும் அறைக்குள் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, வாழ்த்து கோஷங்களை எழுப்ப கூடாது. கொடிகளை பயன்படுத்தக்கூடாது. கொரோனா பரவல் காரணமாக வேட்பாளர் மற்றும் அவருடன் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். படிவம் 26-ல் எந்தவொரு விவரத்தையும் விடுபடாமல் முழுமையாக ஆம், இல்லை என்றுபூர்த்தி செய்ய வேண்டும். இல்லை என்பதை குறிக்கும் வகையில் கோடு மட்டும் போடக்கூடாது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தற்போதைய வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் மூலமாகவும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஒருவர் முன்மொழிந்தால் போதுமானது. மற்றவர்களுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும். வேட்பாளருக்கு எதிரான கிரிமினல் வழக்கு அல்லது கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற விவரத்தை வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு 3 முறை செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளருக்கு உரிய சின்னம் ஒதுக்குவது தொடர்பாக கட்சியின் தலைமையிடமிருந்து படிவம் ஏ மற்றும் பி அசல் பெற்று வேட்பு மனுவுடன் கொடுக்க வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து தேர்தல் செலவின கணக்குகளை பராமரிக்க வேண்டும். தேர்தல் செலவின கணக்கு பராமரிப்பதற்கு வேட்பாளரால் தனி வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். தேர்தல் செலவுகளை வங்கி கணக்கு மூலமாக செய்ய வேண்டும். வருகிற 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். 20-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை, 22-ந் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசிநாளாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, தேர்தல் தாசில்தார் முருகதாஸ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News