செய்திகள்
மகேஸ்வரன்

கடைகளின் பூட்டை ‌உடைத்து‌ கைவரிசை காட்டிய வாலிபர் கைது

Published On 2021-03-10 18:19 GMT   |   Update On 2021-03-10 18:19 GMT
கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய வாலிபர், தனது கூட்டாளிகளுடன் நிதி நிறுவனம் ஒன்றில் திருட முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கினார்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் பூட்டை நேற்று முன்தினம் மாலையில் அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள் உடைத்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க ஓடிவந்தனர்.

பொதுமக்கள் வருவதை பார்த்த அவர்கள் 4 பேரும் தாங்கள் வந்த ஒரே மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்செல்ல முயன்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் வண்டியில் ஏற முடியவில்லை.

இதையடுத்து அவருடன் வந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அதே நேரத்தில் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்ததால், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஜேடர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம், சோலார் பகுதி பாலுசாமி நகரைச் சேர்ந்த காளியப்பன் மகன் மகேஸ்வரன் (வயது 20) என்பது தெரியவந்தது.

அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஜேடர்பாளையம் அருகே நரிமேடுப்புதூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரத்தையும், அதே பகுதியில் உள்ள கரும்பு அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்து 200-ம், கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.750-ம், கொத்தமங்கலத்தில் உள்ள நாட்டு சர்க்கரை மற்றும் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரத்தையும், அதே பகுதியில் உள்ள மற்றொரு அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்து 850-ஐ திருடியது என தங்களின் கைவரிசை குறித்து போலீசார் விசாரணையில் தெரிவித்தார்.

மேலும் அவருடன் வந்து தப்பிச்செல்ல முயன்றவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (23), பெருமாள் (20), குமார் (20) என தெரியவந்தது. இதையடுத்து மகேஸ்வரனை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News