செய்திகள்
நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் சத்தியராஜ் பேசியபோது எடுத்த படம்.

சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் - நாட்டுப்புற கலைஞர்கள் அறிவிப்பு

Published On 2021-03-04 15:28 GMT   |   Update On 2021-03-04 15:28 GMT
கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவொரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்காவிடில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று நாட்டுப்புற கலைஞர்கள் அறிவித்துள்ளனர்.
விழுப்புரம்:

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சீனிவாசன், செந்தில்குமார், மோகன்ராம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சத்தியராஜ், மாநில பொதுச்செயலாளர் தங்க ஜெயராஜ், தலைமை ஆலோசகர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் ஜெகதீசன், சந்திரசேகர், ரமேஷ், வேலு, சத்யா, தண்டபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாயவன் நன்றி கூறினார். முன்னதாக மாநில தலைவர் சத்தியராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது மாநில சங்கத்தில் பம்பை, உடுக்கை, நையாண்டி, கும்மி கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். கொரோனா காலத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரும் தொழிலின்றி ஓராண்டு காலம் வாழ்வாதாரத்திற்கே வழியில்லாமல் மிகவும் வறுமையில் வாடினோம். எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைக்க எந்தவொரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரசு தொகுப்பு வீடு, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட வேண்டும்.

தற்போது தேர்தல் நேரத்தில் நாங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் காவல்துறை அனுமதி மறுக்கிறது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மேலும் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே நடைபெறவுள்ள தேர்தலில் நாட்டுப்புற கலைஞர்களின் நலனில் அக்கறை செலுத்தி எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிடும் அரசியல் கட்சிக்கே நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவொரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்காவிடில் 12 லட்சம் கலைஞர்களும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News