செய்திகள்
சென்னை ஐகோர்ட்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து வழக்கு

Published On 2021-03-03 02:43 GMT   |   Update On 2021-03-03 02:45 GMT
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:

தென்நாடு மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் கணேசன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த மாதம் 26-ந்தேதி தமிழக சட்டமன்றத்தில் தற்காலிக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளதால் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர்மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், 25 சாதிகளைக் கொண்ட வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மீதமுள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். இதனால் வன்னியர்களைத் தவிர்த்து மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்.

இந்த சட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சமூகத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும்.

உண்மையிலே வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு எண்ணம் இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் லாபத்துக்காக அவசர அவசரமாக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் இதுபோன்று சட்டம் இயற்றுவது சரியாக இருக்காது.

எனவே, இந்த சட்டத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இச்சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News