செய்திகள்
சுய உதவிக்குழு பெண்கள் முற்றுகை

கடன் தொகையை உடனடியாக வழங்க கோரி கூட்டுறவு சங்கத்தை சுய உதவிக்குழு பெண்கள் முற்றுகை

Published On 2021-03-02 18:15 GMT   |   Update On 2021-03-02 18:15 GMT
அன்னமங்கலத்தில் கடன் தொகையை உடனடியாக வழங்க கோரி கூட்டுறவு கடன் சங்கத்தை சுய உதவிக்குழு பெண்கள் முற்றுகையிட்டனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கம் மூலம் அன்னமங்கலம், விசுவக்குடி, முகமதுபட்டிணம் ஆகிய ஊர்களில் உள்ள 6 சிறுபான்மை பிரிவை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதியாக ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடன் வழங்குவதற்கான ஆணையை திருச்சியில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவி குழுவினரிடம் வழங்கியுள்ளனர். ஆனால் அந்த கடன் தொகையை அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இதுவரை மகளிர் குழுவினருக்கு வழங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஏராளமான பெண்கள், சுழல் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள், இந்த வாரத்திற்குள் சுழல் நிதி, சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்படும், என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News