செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - கலெக்டர் ராமன் எச்சரிக்கை

Published On 2021-03-01 02:32 GMT   |   Update On 2021-03-01 02:32 GMT
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சேலம்:

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, மருத்துவக்கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதே போன்று வருவாய், காவல், உள்ளாட்சி, மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் ரெயில்வே பாதுகாப்பு முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 60 வயதிற்குள்ளாக உள்ள இணை நோய்கள் உள்ளவர்களுக்கும், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடப்பட்ட முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. மேலும், பட்டியலில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரசு சார்ந்த தடுப்பூசி முகாம்களில் இலவசமாகவும், பட்டியலில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கான கட்டணம் ரூ.250 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.100 சேவைக்கட்டணமும் அடங்கும்.

முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பதிவு செய்ய முடியாதவர்கள் நேரடியாக வந்து, தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட வரும் பயனாளிகள் தங்களின் அடையாளத்திற்காக புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களான ஆதார், பான் கார்டு, போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான ரூ.250 விட அதிகமாக கொடுக்கும்படி கேட்கும்பட்சத்தில் உடனடியாக 104 மற்றும் 1077 என்ற எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News