செய்திகள்
மிகவும் குறைவாக பஸ்கள் இயக்கப்பட்டதால், பயணிகள் கூட்டம் அலைமோதி, பஸ்சுக்காக காத்து நிற்கும் காட்சி.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2-வது நாளாக குறைவான பஸ்கள் இயக்கம்

Published On 2021-02-26 11:00 GMT   |   Update On 2021-02-26 11:00 GMT
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில், ஈடுபட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதனால் நேற்று 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பொதுமக்கள் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்றும் அதிகாலை வெளியூர்களுக்கு செல்லும் ரூட் பஸ்கள், டவுண் பஸ்கள் இயக்கப்படவில்லை.

காலை 5.30 மணிக்கு பிறகே குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக டிரைவர்கள் தொடர்ந்து பஸ்கள் இயக்க அனுமதிக்கமாட்டார்கள். இடையில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும்.

இதனால் நேற்றை விட இன்று குறைந்த அளவே டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வந்தனர். இதனால் இன்று பெரும்பாலான அரசு பஸ்களில் தற்காலிக பஸ் டிரைவர்கள் சீருடை இல்லாமல் பஸ்களை இயக்கினர்.

நேற்றைவிட இன்று மிகவும் குறைந்த அளவில் பஸ்கள் ஓடியது. இதனால் டெப்போக்களில் ஏராளமான பஸ்கள் இயக்கப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அனைத்து பஸ்நிலையங்களிலும் இன்று மக்கள் கூட்டம் கூடி, பஸ்கள் கிடைக்காமல் தவிக்க நேரிட்டது. நெல்லை தற்காலிக பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் இல்லாமல் நீண்ட நேரம் காத்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரிகள் டவுண் பஸ்களின் அவர்களை ஏற்றி, அதை வெளியூர் ரூட் பஸ்களாக மாற்றி இயக்கினர். இதனால் நெல்லை மாநகரில் குறைந்த அளவு அரசு டவுண் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான டவுண் பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன.

இதனால் தனியார் டவுண் பஸ்கள், வழக்கத்தைவிட கூடுதல் ‘டிரிப்’ அடித்து பயணிகளை ஏற்றிச் சென்றனர். வெளியூர்களுக்கு செல்லும் தனியார் பஸ்களும் 100 சதவீதம் ஓடியது.

நெல்லை போக்குவரத்து கழக டெப்போக்கள் முன்பு இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் பஸ்களை இயக்காமல் போராட்டத்தை நீடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை என்றால் மறியல் போராட்டம் நடத்துவது குறித்தும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

இதனால் இன்றும் அனைத்து அரசு போக்குவரத்து கழக டெப்போக்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுபோல அனைத்து பஸ் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News