செய்திகள்
கோப்புப்படம்

ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி பஸ் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தம்

Published On 2021-02-24 23:29 GMT   |   Update On 2021-02-24 23:29 GMT
போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) முதல் நடைபெறும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு சென்னையில் அறிவித்தது.
சென்னை:

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன.

இந்தநிலையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னை பல்லவன் சாலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனைக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த தொ.மு.ச. பொருளாளர் நடராஜன் கூறியதாவது:-

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 18 மாதமாக நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அமைச்சரும், நிர்வாகமும் எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் வந்து கலந்துகொண்டதுடன், முறையான பதிலை தெரிவிக்காமல் கூட்டத்தை முடித்துக்கொண்டனர்.

தொடர்ந்து அடுத்த கூட்டம் எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை கேட்டும் பதில் இல்லை. இதனால் வேறு வழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அதற்கான அறிவிப்பையும் முறையாக வெளியிட்டுள்ளோம்.

திட்டமிட்டபடி இன்று (நேற்று) நள்ளிரவு முதல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். 95 சதவீத தொழிலாளர்கள் இதற்கு ஆதரவு தருவதால் பஸ்கள் ஓடாது. பொதுமக்களின் சிரமத்துக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க கோருகிறோம். அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் பஸ்களை பொறுத்தவரை எங்களைத் தவிர வேறு யாரும் ஓட்ட முடியாது. பயிற்சி இல்லாதவர்களை வைத்து பஸ்களை இயக்கி அப்பாவி பயணிகளை நிர்வாகம் ஆபத்துக்குள்ளாக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் சி.ஐ.டி.யூ.வைச் சேர்ந்த ஆறுமுக நயினார், எச்.எம்.எஸ். மாநிலத் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News