செய்திகள்
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தியபோது எடுத்த படம

கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் - ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு

Published On 2021-02-24 12:07 GMT   |   Update On 2021-02-24 12:07 GMT
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் நாகராஜன், மாநில குழு உறுப்பினர் அங்கம்மாள், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் லில்லி புஷ்பம், ஈஸ்வரி உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

இந்த போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணி கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் குழுவாக அமர்ந்து ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News