செய்திகள்
கைது

மதுரை அருகே கோவில்-வீடுகளில் திருடிய கொள்ளையன் கைது

Published On 2021-02-23 12:28 GMT   |   Update On 2021-02-23 12:28 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகளில் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வீடுகள், கோவில்கள் போன்றவற்றில் கொள்ளை சம்பவங்கள் நடந்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கூடக்கோவில் போலீஸ் சரகத்துக்குட்பட்ட எலியார்பத்தி டோல்கேட் அருகே லாரியில் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் செல்போன் திருட்டு போனதாக சேலம் மாவட்டம் சங்கிரியை சேர்ந்த என்ஜினீயர் யுவராஜ் (32) புகார் செய்தார்.

வேலை விசயமாக தெரிந்தவர் லாரியில் வந்ததாகவும் டோல்கேட் அருகே டீ குடித்த நேரத்தில் இந்த திருட்டு நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். யுவராஜின் செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து விசாரித்தபோது அந்த செல்போன் திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வெள்ளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் ஜெயபாலனிடம் இருப்பது தெரியவந்தது.

போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்திய போது, செல்போன் மற்றும் லேப்-டாப் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் பல்வேறு பகுதிகளில் வீட்டை உடைத்து நகை திருடியது, கோவில்களில் உண்டியல், மணி திருடியது ஆகியவற்றிலும் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீசார் ஜெயபாலனை கைது செய்தனர்.

கைதான அவரிடம் இருந்து 23¼ பவுன் தங்க நகைகள், 10 கோவில் வெண்கல மணிகள், ஆம்பிளிபயர், லேப்-டாப், செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News