செய்திகள்
பயன்பாடின்றி வீசப்பட்ட கட்டில், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை படத்தில் காணலாம்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குவிந்து கிடக்கும் குப்பை - சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

Published On 2021-02-22 00:34 GMT   |   Update On 2021-02-22 00:34 GMT
திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இங்கு உள்நோயாளியாகவும், புறநோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா நோயாளிகளும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனால் அரசு மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இதற்கிடையே தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவனையும் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேகரமாகும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அள்ளப்படாமல், அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதுபோல் இந்த குப்பைகள் கிடக்கும் பகுதியில் பழைய கட்டில்கள், நாற்காலிகள் போன்ற பொருட்களும் வீசப்பட்டுள்ளன.

அந்த பகுதியே குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்கள் குப்பைகளை கொட்டுவதால், அதனை பார்க்கிறவர்களும் இவ்வாறு செய்து வருகிறார்கள். தற்போது அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நோயாளிகள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வருகிறவர்கள் என எப்போதும் அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆஸ்பத்திரி வளாகத்தில் குப்பை தொட்டிகள் அதிக அளவு இல்லை. குப்பை தொட்டிகள் இல்லாததால் பலரும் குப்பைகள் மற்றும் கழிவுகளை வளாகத்தில் உள்ள பகுதிகளில் கொட்டிவருகிறார்கள்.

இதுபோல் மருத்துவமனை ஊழியர்கள் சிலரும் அதே பகுதியில் கொட்டி வருகிறார்கள். இவ்வாறாக குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் டெங்கு கொசு உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். கூடுதலாக குப்பை தொட்டிகள் ஆஸ்பத்திரி வளாகத்தில் வைக்க வேண்டும். இதனையும் மீறி குப்பைகளை கொட்டுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News