செய்திகள்
பாஸ்டேக்

பாஸ்டேக் ஸ்டிக்கர் பெறாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்தி பயணம்

Published On 2021-02-16 09:45 GMT   |   Update On 2021-02-16 09:45 GMT
தமிழகத்தில் பாஸ்டேக் திட்டத்தில் இணையாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்தி நள்ளிரவு முதல் பயணத்தை தொடங்கினர்.
சென்னை:

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் திட்டம் நள்ளிரவு முதல் முழுமையாக அமலுக்கு வந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக பாஸ்டேக் ஸ்டிக்கர் பெறுவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் ஸ்டிக்கர் பெறாமல் பயணம் செய்பவர்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனால் நேற்று பலர் பாஸ்டேக் ஸ்டிக்கர் பெறுவதில் ஆர்வம் காட்டினர். சுங்கச்சாவடிகளிலும், வங்கிகளிலும் பணம் செலுத்தி அதற்கான ஸ்டிக்கரை பெற்று வாகனத்தில் ஒட்டி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர். கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் பெறாமல் சுங்கச்சாவடிகளை அடைந்த போது அவர்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தமிழகத்தில் பாஸ்டேக் திட்டத்தில் இணையாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்தி நள்ளிரவு முதல் பயணத்தை தொடங்கினர். இதனால் பல இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் ஊழியர்களுடன் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக தர மறுத்து வாகன உரிமையாளர்கள் பிடிவாதமாக இருந்தனர்.

இதனால் சுங்கச்சாவடிகளில் விரைவாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதே நேரத்தில் பாஸ்டேக் ஸ்டிக்கர் பெறுவதிலும் வாகன ஓட்டிகள் அதிகாலையிலும் ஆர்வமாக இருந்தனர். பாஸ்டேக் ஸ்டிக்கர் பெற்ற வாகனங்கள் செல்ல வழிகள் அடையாளம் காணப்பட்டு இருந்ததால் எளிதாக கடந்து சென்றன. பணம் செலுத்தி செல்ல வேண்டிய வாகனங்களுக்கு தனி லைன் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதில் சென்ற வாகனங்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்தி சென்றன. பயணம் தடை பெறாமல் இருக்க பலர் இரு மடங்கு கட்டணத்தை செலுத்திவிட்டு சுங்கச்சாவடிகளை கடந்து சென்றனர்.

சிலர் சுங்கச்சாவடிகளில் விசே‌ஷமாக அமைக்கப்பட்டு இருந்த பாஸ்டேக் ஸ்டிக்கர் விற்பனை கவுண்டரை அணுகி பணம் செலுத்தி உடனே ஸ்டிக்கர் பெற்று செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிகாலை நேரத்திலும் பாஸ்டேக் ஸ்டிக்கர் பெறுவதற்காக காத்து நின்றனர்.

வானகரம், போரூர், சூரப்பட்டு, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு ஸ்டிக்கர் விற்பனையாகி உள்ளது.

இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரி ஜனக்குமார் கூறியதாவது:-

நள்ளிரவு முதல் பாஸ்டேக் ஸ்டிக்கர் திட்டம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கடைசி நேரத்தில் ஸ்டிக்கர் வாங்குவதற்கு அதிகமான பேர் குவிந்தனர். வானகரம் சுங்கச்சாவடிகளில் மட்டும் நேற்று 600 பேர் ஸ்டிக்கர் வாங்கியுள்ளனர். குறைந்தபட்சம் ரூ.200 செலுத்தி ஸ்டிக்கர் பெற வேண்டும். வாகன உரிமையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனங்கள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக ஸ்டிக்கர் விற்பனை செய்கிறது. வங்கிகளிலும் பெற்றுக் கொள்ளலாம். ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் எந்த தடையும் இல்லாமல் பயணத்தை தொடரலாம்.

இதுதவிர சுங்கச்சாவடிகளிலும் ஸ்டிக்கர் விற்பனை செய்ய சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் வாகன உரிமையாளர்கள் உடனே அதனை வாங்கி பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனம் செல்ல தனி வசதியும், விலக்கு அளிக்கப்பட்டுள்ள பாஸ் உரிமம் பெற்றவர்கள் செல்ல தனி வசதியும் உள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்து நிற்க தேவையில்லை. விரைவாக கடந்து செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் முக்கியமான சுங்கச்சாவடியாக உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது.

பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட 2 மடங்கு கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டது.

சில வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணம் தர மறுத்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகன ஓட்டிகளை பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வாங்கி வாகனத்தில் ஒட்டும்படி அறிவுரை வழங்கினார்கள்.
Tags:    

Similar News