செய்திகள்
கோப்புபடம்

ரூ.15 லட்சம் மோசடி செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர்கள் மனு

Published On 2021-01-26 08:53 GMT   |   Update On 2021-01-26 08:53 GMT
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர்கள் மனு அளித்து உள்ளனர்.
சேலம்:

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கலெக்டர் நேரடியாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியில் பொதுமக்கள் நேற்று மனுக்களை போட்டனர்.

தாரமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த வடிவேல், அன்பழகன், முனுசாமி, முருகவேல், செல்வம் உள்ளிட்ட வாலிபர்கள் சிலர் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மோட்டூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் எங்களிடம் அணுகி பணம் கொடுத்தால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நங்கவள்ளி, மேச்சேரி, குளத்தூர் பகுதிகளில் குடிநீர் குழாய் ஆப்ரேட்டர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்.

இதை நம்பி 14 பேர் சேர்ந்து கடந்த ஆண்டு ஒப்பந்ததாரரிடம் ரூ.15 லட்சம் கொடுத்தோம். ஆனால் இதுவரை எங்களுக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. மேலும் எங்களுக்கு வேலை கிடைத்து விட்டது போல் ஒரு போலியான வேலை உத்தரவு ஆணையை தயாரித்து எங்களிடம் கொடுத்தார்.

அதை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்ற போது அது போலியானது என்று தெரிந்தது. எனவே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள சங்கீதப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சிலர், அவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

தாரமங்கலம் துட்டம்பட்டி ஊராட்சி பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதி கடைக்கோடியில் உள்ளதால் காவிரி கூட்டுக்குடிநீர் சரியாக வருவதில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. அதுவும் இரவு நேரங்களில் வருகிறது. மேலும் ஒவ்வொருவருக்கும் 10 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. எனவே மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News