செய்திகள்
மீட்பு

கேரளாவில் மாயமான பிளஸ்-1 மாணவன் சேலத்தில் மீட்பு

Published On 2021-01-20 09:58 GMT   |   Update On 2021-01-20 09:58 GMT
பள்ளிக்கூடம் செல்ல பிடிக்காததால் மாயமான பிளஸ்-1 மாணவன் சேலத்தில் மீட்கப்பட்டான்.
சேலம்:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஓவங்கமாலி பகுதியை சேர்ந்தவர் பாபு பீட்டர். இவருடைய மகன் டேல்வின்பீட்டர் (வயது 18). இவன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறான். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்களிடம் பள்ளிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற அவன் பின்னர் வீடு திரும்பவில்லை. டேல்வின்பீட்டரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து பாலக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மாணவனின் செல்போன் எண்ணை வைத்து அவன் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர். அப்போது மாணவன் சேலத்தில் இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சேலம் மாநகர போலீசாரை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்ததுடன் மாணவனின் புகைப்படத்தையும் அனுப்பினர். இந்த புகைப்படத்தை வைத்து பள்ளப்பட்டி போலீசார் தேடி வந்தனர். அப்போது 5 ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த டேல்வின் பீட்டரை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பள்ளியில் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளதால் அங்கு சென்று படிக்க பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறி வந்ததும், இதனால் வீட்டைவிட்டு மாணவன் வெளியேறியதும் தெரியவந்தது.

இதுகுறித்து பாலக்காடு போலீஸ் நிலையம் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உறவினர்கள் சேலம் வந்து டேல்வின் பீட்டரை அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News