செய்திகள்
தொட்டியம் அருகே குளத்தில் கற்கள் பெயர்ந்து மதகு உடைந்து கிடக்கும் காட்சி.

தொட்டியம் அருகே குளத்தில் உடைந்த மதகை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2021-01-18 14:43 GMT   |   Update On 2021-01-18 14:43 GMT
தொட்டியம் அருகே குளத்தில் உடைந்த மதகை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொட்டியம்:

தொட்டியம் அருகே உள்ள குளத்தில் இருந்து அலகரை செல்லும் மேட்டு பிளார் வாய்க்கால் கரையில் ஊமையன் போக்கு என்ற மதகு உள்ளது. மழை காலங்களில் வாய்க்காலில் அதிகமாக தண்ணீர் வரத்து வரும் போது இந்த மதகில் உள்ள ஷட்டரை திறந்து உபரியாக வரும் தண்ணீரை வெளியேற்றுவது வழக்கம்.

மேலும் இந்த வடிகால் வழியாக செல்லும் உபரி நீர் நேராக கொண்டாம் வாரி வாய்க்கால் வழியாக சென்று காவிரியில் கலந்து விடுகிறது. மிகவும் பழமையான இந்த மதகு தற்போது கற்கள் பெயர்ந்து கீழே விழுந்து ஷட்டரை திறக்க முடியாத அளவிற்கு சிதிலமடைந்து உள்ளது.

இதனால் தண்ணீர் எந்த நேரமும் வடிகால் வழியாக வீணாக வெளியே செல்வதால் குளத்தில் இருந்து கிழக்கு பகுதியில் உள்ள அலகரை, அரியணாம்பேட்டை, கல்லுப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வரத்து குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

இந்த மதகு உடைந்ததால் இப்பகுதியில் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியவில்லை. இதனால் இடுபொருட்களையும், வாழைக்கு போடும் மூங்கில்களையும் கொண்டு செல்ல முடியவில்லை.

மேலும் விளைந்த வாழைக்காய்களை வெளியே கொண்டு வரும்போது பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே குளத்தில் இருந்து அலகரை செல்லும் வழியில் உள்ள இந்த பாதையை அகலப்படுத்தி புதிய பாலம் அமைத்து மதகு ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News