செய்திகள்
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

Published On 2021-01-17 11:20 GMT   |   Update On 2021-01-17 11:20 GMT
கொரோனா தடுப்பூசி போடும் பணியை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்:

கொரோனா நோய்க்கு தடுப்பூசி சோதனை முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். கொரோனா வார்டு தனி அதிகாரி டாக்டர் மலையரசு, மருத்துவ துணை இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதைதொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும் இந்த தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, பரமக்குடி அரசு ஆஸ்பத்திரி, பார்த்திபனூர், கீழத்தூவல், பேரையூர் ஆகிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் 7 ஆயிரத்து 172 அரசு சுகாதார பணியாளர்களும், 2 ஆயிரத்து 684 தனியார் மருத்துவமனை பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 8300 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான மருந்துகள் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசி போட்ட பின்பு 2-வது தவணை தடுப்பூசி 28 நாட்களுக்கு பிறகு வழங்கப்படும். முதல் தடுப்பூசி போட்ட உடனே 2-வது தடுப்பூசி போடுவதற்கான தேதி குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி டீன் அல்லி, மருத்துவ இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் முதன்முதலாக தமிழ்நாடு அரசு நர்சு சங்க மாநில துணைத் தலைவர் இளங்கோவன், கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். பின்பு அவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு மருத்துவ பணியாளரான டெல்பினா, ஆரதி ஆகியோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இவர்களுக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் நெப்போலியன், முகேஷ் மற்றும் மருத்துவ சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News