செய்திகள்
மருத்துவமனையில் பெண் முன்களப்பணியாளர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை படத்தில் காணலாம்.

கரூர் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

Published On 2021-01-17 10:18 GMT   |   Update On 2021-01-17 10:18 GMT
கரூர் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கரூர்:

கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை சார்பில் நடைபெற்ற முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று ( அதாவது நேற்று) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி மாதம் 8-ந்தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் 1,050 பணியாளர்களுக்கும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 363 பணியாளர்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 3,321 பணியாளர்களுக்கும், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 1,584 பணியாளர்களுக்கும் என மொத்தம் 6,318 பணியாளர்களுக்கும், இத்துடன் அங்கன்வாடியை சேர்ந்த 1,209 பணியாளர்களுக்கும் மற்றும் இதர முன் களப்பணியாளர்கள் 3,483 பேர் என மொத்தம் 11,010 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், குளித்தலை அரசு மருத்துவமனையிலும், வாங்கல் மற்றும் உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் என 4 இடங்களில் நாள் ஒன்றுக்கு தலா 100 பேர் என 400 பேருக்கு தடுப்பூசி போடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதற்காக 780 தடுப்பூசி குப்பிகள் வரப்பெற்று உள்ளது. ஒரு குப்பியின் மூலம் 10 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். 780 தடுப்பூசி குப்பிகள் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 0.5 மி.லி அளவு செலுத்தப்படுகிறது. இதன்மூலம் 7,800 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த முடியும். முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மீண்டும் 4 வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக செலுத்தப்பட உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் அறிவித்ததுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் விரைவில் தடுப்பூசிகள் விலையில்லாமல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யானகண் பிரேம் நவாஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ் குமார், டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News