செய்திகள்
வடமதுரை போலீசில் தஞ்சமடைந்த சீனிவாசன்- தமயந்தி ஜோடி

வடமதுரையில் போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய காதல் ஜோடி

Published On 2021-01-16 09:19 GMT   |   Update On 2021-01-16 09:19 GMT
வடமதுரையில் திருமணம் முடிந்த அன்றே போலீசாருடன் தலைப்பொங்கலை மணமக்கள் கொண்டாடினர்.
வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் நிலையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அப்போது திடீரென்று ஒரு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பி.கொசவபட்டியை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் சீனிவாசன் (வயது 28) மற்றும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மண்வாரி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தமயந்தி (19) என்பது தெரியவந்தது.

இருவரும் உறவினர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஓராண்டாக காதலித்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். எனினும் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ போலீசார் அனுமதி வழங்கினர். பின்னர் மணமக்கள் போலீசாருடன் சேர்ந்து பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த அன்றே போலீசாருடன் தலைப்பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சியுடன் மணமக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Tags:    

Similar News