செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-01-06 08:04 GMT   |   Update On 2021-01-06 08:04 GMT
அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.01.2021 மற்றும் 08.01.2021 : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09.01.2021 : தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

10.01.2021 : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 21 செ.மீ., சென்னை அண்ணா பல்கலை., தாம்பரம் தலா 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று மற்றும் நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News