செய்திகள்
மேட்டூர் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது - மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2021-01-04 13:57 GMT   |   Update On 2021-01-04 13:57 GMT
மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:

ஆங்கில புத்தாண்டு பிறப்பு விடுமுறை தினத்தில் சேலம் மாவட்டம் மேட்டூர் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பூங்கா 2 நாட்களாக மூடப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் மேட்டூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பூங்காவை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். ஒரு சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து, அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் வழிபாடு செய்தனர்.

சிறுவர், சிறுமிகள் ஊஞ்சலில் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் பூங்கா பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காட்சி அளித்தது.

இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

மேட்டூர் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பூங்காவில் வண்ண மீன் அருங்காட்சியகத்தை பார்த்து மகிழ்ந்தோம். ராட்டினம், ஊஞ்சல் போன்ற விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

அணையின் வலதுகரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்று அணையின் முழுமையான தோற்றத்தை கண்டு ரசித்தோம். இதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பூங்காவில் எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சி அளித்தது மனதிற்கு இனிமையாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News