செய்திகள்
பெரம்பலூர் அருகே செங்குணத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மஞ்சள் குலைகளை காணலாம்.

பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயார் நிலையில் மஞ்சள் குலைகள்

Published On 2021-01-04 08:41 GMT   |   Update On 2021-01-04 08:41 GMT
பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
பெரம்பலூர்:

பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை. மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை விளங்குகிறது. பண்டிகையின்போது பொங்கலிடும் பானையை சுற்றி மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் குலைகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஆண்டுதோறும் மஞ்சள் குலைகள் சாகுபடி செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இலையுடன் கூடிய மஞ்சள் குலையை அறுவடை செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வோம். வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக மஞ்சள் குலையை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்வார்கள்.

தற்போது மஞ்சள் குலை செழுமையாக வளர்ந்துள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் குலைகள் விற்பனைக்கு அனுப்பப்படும், என்றார்.
Tags:    

Similar News