செய்திகள்
கொள்ளை நடந்த ஆலயத்தில் போலீசார் விசாரணை நடத்தியதை காணலாம்

கிறிஸ்தவ ஆலயத்தில் 10 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2021-01-02 02:46 GMT   |   Update On 2021-01-02 02:46 GMT
அருமனையில் பட்டப்பகலில் கிறிஸ்தவ ஆலயத்தில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அருமனை:

அருமனை மேலத்தெரு ஆர்.சி. தெரு பகுதியில் தூய பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் 2 குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு ஆலயத்தை பூட்டிவிட்டு அனைவரும் வீடுகளுக்கு சென்றனர்.

புத்தாண்டையொட்டி நேற்று காலையில் ஆலயம் திறக்கப்பட்டது. ஆர்.சி. தெரு கிராமத்தில் திருமணம், வீடு கிரகப்பிரவேஷம் என பல நிகழ்ச்சிகள் நடந்தது. இதனால் கிராம மக்கள் அனைவரும் அவரவர் வீட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.

ஆலயத்துக்கு நேற்று மதியம் 2 மணி அளவில் ஒரு ஆண மற்றும் ஒரு பெண் வந்து பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். இதனை பொதுமக்கள் பலரும் பார்த்துள்ளனர். மாலை 4 மணி அளவில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் கோவிலில் காணிக்கை செலுத்த சென்றார். அப்போது கோவில் உள் பகுதியில் இருந்த மாதா சிலையின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் ஆலய நிர்வாகிகளிடம் தெரிவித்தார். ஆலய நிர்வாகிகள் வந்து பார்த்தனர். அப்போது மாதா சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுபற்றி ஆலய கமிட்டி துணைத்தலைவர் லிஜின் அருமனை போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.

இது தொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News